நிறைய சொல்லிட்டம் நிறைவேற்றி வைப்பிங்களா?

   தண்ணீருக்கு தாம்படும் பாட்டை கண்ணீரோடு சொன்னார்கள் தஃ14ஐ கிராம சேவகர் பிரிவாகக் கொண்ட வேலணை துறையுர் வாழ் மக்கள். “சாப்பாடு இல்லாமலும் இருக்கலாம் பிள்ளையல் தண்ணி இல்லாமல் எப்பிடி இருக்கிறது சொல்லுங்கோ…”என்றார் யோகேஸ்வரி என்பவர்.
         வேலணைப்பகுதியில் நிலவும் தண்ணீர்ப்பற்றாக்குறை பற்றி கேள்விப்பட்ட நாம் அங்கு செல்ல வேண்டும் என தீர்மானித்தோம். சக நண்பியின் உதவியுடன் வேலணை வங்களாவடி வரை சென்றோம். நாம் செல்ல வேண்டிய இடத்தையும் வந்த விடயத்தையும் நண்பியின் தந்தைக்கு கூறினோம்.அவர் நாம் செல்ல வேண்டிய இடத்தின் குறிப்பை கூறினார். வங்களாவடியில் இருந்து வேலணை துறையுர் கிராமத்தை நோக்கி கால் நடையாக தொடர்தது நம் பயணம்.நாற்பத்தைந்து நிமிடங்களில் துiயுரை அடைந்தோம். வழி முழுவதும் கண்ட தென்னைகள்  கோயில்கள் மனதிற்கு மகிழ்வைத்தர குதூகலமாகவே நடந்தோம். நமக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது என்பதை அறியாத அப்பாவிகளாக விளையாட்டுத்தனமாகவே சென்றோம். செல்லும் வழியில் விற்கப்பட்ட மாங்காயைக் கண்ட நண்பி அதை வாங்கி ருசிக்க ஆசைப்பட நாமும் சேர்ந்தே ருசிக்க நேர்ந்தது. இடை வழியில் தண்ணீர்தாகமெடுத்தது. தண்ணீரைத்தேடி அலைபாய்ந்தன நம் கண்கள். அவ்வேளை வீதியோரமாக தண்ணீர்க்குழாய் கண்ணில் பட தண்ணீர் குடிக்கும் ஆவலில் ஓடிச்சென்று தண்ணீர்குழாயை திறந்த எமக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டும்தான். ஏக்கத்துடன் தண்ணீர்குழாயைப்பார்த்த எம்மை அருகில் இருந்த கடைக்காரர் அவதானித்துவிட்டார் போலும். “பிள்ளையல் பை;பில இப்ப தண்ணி வராது அது ஒரு மணிக்குத்தான் வரும்.இந்தாருங்கோ தண்ணி” விசனத்துடன் கூறியவாறு கருணையுடன் தண்ணீர் தந்தார். அமிர்தம் கிடைத்தது போன்ற சந்தோசத்துடன் நீரைப்பகிர்ந்து குடித்துவிட்டு நன்றியுடன் நடையைத்தொடர்தோம். குறும்புத்தனத்துடன் ஆரம்பித்த எம்பயணம் அச்சம்பவத்துடன் குமுறலுடன் தொடந்தது. துறையுர் முழுதும் நாம் சென்ற வழியில் கண்ட குழாய்களை சூழ தண்ணீரக்கலன்கள் நீருக்காக தவமிருந்தன. பன்னிரண்டுமணி உச்சி வெயில் நீரின் வலியுறுத்திக்கொண்டிருந்தது. கலன்கள் தனிமையில் தான் இருந்தன. அதனருகில் மக்கள் எவரையும் காணவில்லை. யாரோடு பேசுவதென்று சிந்தித்தபடியே சென்றபோது கண்ணெதிரே மற்றுமொரு கடையைக்கண்டோம். அங்கு சென்ற நாம் கடைக்கருகில் பேருந்திற்காக காத்திருந்த சறோஜா என்பவரிடம் மெதுவாகப்பேச்சைக் கொடுத்தோம். அவரிடமிருந்து வந்த முதல் கேள்வி “நீங்க யாரு”என்பது தான். அப்போது தான் புரிந்தது அவரது கருத்தை கேட்கும் ஆவலில் எம்மை அறிமுகப்படுத்த மறந்து விட்டோம் என்பது. அறிமுகத்தின் பின் தமக்குள்ள நீர்ப்பிரச்சினை பற்றி தயக்கமின்றி நம்மோடு பேசினார். “இது பிள்ளையல் துறையுர் நாலாம் வட்டாரம். நான் இப்ப கொஞ்ச நாளைக்கு முதல் தான் வன்னில இருந்து வந்தனான். இங்க தண்ணிக்கு செரியான கஸ்டம். ஒரு நாளைக்கு ஒருக்கா தான் பிள்ளையல் தண்ணி வரும். அதுவும் ஒரு மணித்தியாலம் தான்.எல்லாரும் ஒரே நேரத்தில எடுக்கவும் ஏலாது”என ஆதங்கமாகக் கூறினார்.
        அடிப்படைத்தேவை குடிநீர் .அது கிடைப்பதற்கு இந்நிலையா?எப்படி குடிநீர் இல்லாமல் இருப்பது. உயிர் வாழ முக்கியமானதே அது தானே! பசிக்கு உணவு கிடைக்காவிட்டால் தண்ணீரைக்குடித்து வயிற்றப்பசியை ஆற்றிக் கொள்ளும் கதையைக்கூட கேட்டிருக்கின்றோம். அவ்வாறிருக்க இங்கு நீர் கிடைப்பதே சிரமமாக உள்ளதை காணம் போது தான் இவர்கள் படும் துன்பம் வார்த்தையில் கூற முடியாதென்பதை உணர முடிகின்றது.அரட்டை அடித்தபடி சென்ற எமக்கு சறோஜா அவர்கள் தம் நிலை பற்றி கூறியதைக் கேட்ட பின் அடுத்த வார்தை வர மறுத்தது. மௌனமாகவே தொடர்ந்தது நம் நடை. நடந்த தூரம் முழுவதும் நாம் கண்ட குழாய்கள் எதுவுமே வெறுமனே இருக்கவில்லை. தண்ணீருக்காக ஏங்கும் கலன்களின் நடுவே தான் இருந்தது.


 நடந்தவாறே கிராமத்தில் இறுதியாக குழாய் அமைக்கப்பட்டிருந்த இடம் வரை சென்றுவிடடோம். நேரம் ஒரு மணியை அண்மித்துக் கொண்டி ருந்தது. நீர் வரும் நேரம் நெருங்கியதால் கைகளில் குடங்களையும் பெரல் களையும் தாங்கியபடி பெண்கள் அநேகர் வந்தனர். குழாய்க்கருகில் வந்த குணவதி என்பவர் நம்மை பார்த்து சிரித்தவாறு “என்ன பிள்ளையல் பார்கிறீங்க இது தான் எங்கட நிலமை. இண்டைக்கு தண்ணி எடுத்தா நாளைக்கு எடுக்க முடியாது.   நாளைக்கு வேற கொஞ்சப்பேர் எடுப்பினம்”என்றார். எதுவுமே புரியாதவர்களாய் மீண்டும் வினாவினோம். அப்போதுதான் எல்லாம் புரிந்தது. ஒரு குழாயில் முப்பது குடும்பங்கள் தான் நீர் பெற முடியும். ஆனால் ஒரே நாளில் முப்பது குடும்பங்களும் நீரைப்பெற்றுக் கொள்ள முடியாத நிலை. ஒரு மணிநேரம் மாத்திரம் நீர் விநியோகிக்கப்படுவதால் பதினைந்து குடும்பங்கள் இன்று நீரைப்பெற்றுக் கொண்டால் அடுத்த பதினைந்து குடும்பங்களும் அடுத்த நாளே பெறமுடியும் என்ற கட்டுப்பாடு. சில வேளைகளில் பன்னிரண்டு குடும்பங்களுக்கு மாத்திரமே நீர் போதுமானதாக அமைந்து விடும். அவ்வாறான சந்தர்பங்களில் சற்றுத் தொலைவிலுள்ள சாட்டிக்குச் சென்று அங்கிருந்து நீரைப்பெற வேண்டிய துயரமும் நேர்ந்திருக்கிறது. இவர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போதே தூரத்தில் துவிச்சக்கரவண்டியின் பின்னால் இரண்டு கலன்களை வைத்துக் கொண்டு ஒருவர் வருவது தெரிந்தது.களைத்துப்போய் இருக்கின்றார் என்பதை அவரது வருகை உணர்த்தியது. வந்தவர் ஒரு பெண்மணி.துவிச்சக்கரவண்டியில் இருந்து கலன்களை எடுத்தபடி “ஏன்டியக்கா அடுத்ததா நான் எடுக்கிறனே பிள்ளையல் பள்ளிக்கூடத்தால வந்திடப்போகுதுகள்”என்றபடி குழாய் அருகில் சென்று கலனை வைத்துவிட்டு எம்மை தோக்கினார். அவருடன் கதைத்தோம். “இன்டைக்கு எடுக்கிற தண்ணிய நாளன்டைக்கு வரை வைச்சிருக்கனும். சுpன்னஞ் சிறுசுகளோட சமாளிக்கிறதென்டா எப்பிடி சொல்லுங்கோ பார்ப்பம். குளிக்கிறதுக்கு கிணத்து தண்ணி உப்பெண்டாலும் சமாளிக்கலாம். குடிக்கிறதென்டா என்ன செய்யிறது. மாதம் மாதம் முப்பது ரூபா மட்டில வரி கட்டிறம்.எப்பதான் இந்த தண்ணி பஞ்சம் தீரப்போகுதோ”என்று அங்கலாய்த்தார்.தண்ணீர் குழாய் மூலம் கிடைக்காத சந்தர்ப்பத்தில் வாகனங்களில் நகர சபையினரால் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் முதல் நாள் அறிவித்தால் அடுத்த நாளே வானம் வரும் எனவும் கூறினர். இக்கிராமத்தில் வாழும் வசதி படைத்த சில குடும்பத்தினர் சொந்தமாக தம் வீட்டில் குழாய்களை அமைத்து தண்ணீரைப் பெற்று கொள்வதுடன் தண்ணீர்த்தாங்கிகளில் நீரை சேம்த்து வைத்தும் உள்ளனர். நீர் கிடைக்காது தவிக்கும் குடும்பங்கள் இவர்களிடம் பணத்தைக் கொடுத்து நீரைப் பெற்றுக் கௌ;வதாகவும் குறிப்பிட்டனர்.
 இவ்வாறு இவர்களுடன் கதைத்தபடியே வந்த வழியே திரும்பி வந்தபோது சிறு பையன் ஒருவன் தன்னைவிட உயரிய கலனுடன் வருவதைக் காணமுடிந்தது. மனதை உருக்கும் அக் காட்சியைக் கண்டு நீண்ட மூச்சோடு நடந்தோம். பெண்களும் சிறுவர்களும் தத்தம் கலன்களில் நீரை நிரப்ப முண்டியடித்தனர். மேலும் நடந்து சென்ற போது உச்சி வெயிலில் 75 வயது மதிக்கத்தக்க வயோதிபர் ஒருவர் தண்ணீர்க்கலனுடன் தள்ளாடியபடி வந்தார். அவரோடும் கதைக்க முடிந்தது. தனது பெயர் செல்லப்பா பழனி எனத் தன்னை அறிமுகப்படுத்தியவாறு எம்மோடு பேசினார். வயதுபோன நிலையில் தூர இடம் வந்து தண்ணீர் எடுக்க முடியாததால் தங்கள் வீட்டுக்குத் தனியான குழாய் அமைத்துத்தரும்படி கேட்டபோதும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றார். தனியான குழாய் அமைத்துத் தரக்கூடாதா என வேதனையுடன் கூறினார். அருகில் நின்ற மற்றுமொருவர் கூறியபோது “சமையலையும் விட்டிட்டு தண்ணியெடுக்க இங்க காவல் நிற்கிறம், இந்த தண்ணிலதான் சமைக்கவும் வேணும், குடிக்கவும் வேணும். ஓவ்வொரு நாளும் தண்ணி எடுக்கவும் ஏலாது. இன்டைக்கு எடுத்தா இனி நாளன்டைக்கு தான் நாங்க தண்ணி எடுக்கலாம்” என்று தன் பங்கிற்கு தனது துன்ப நிலையை எம்மோடு பகிர்ந்து கொண்டார். நீரை நிரப்பி வைத்துவிட்டு வெயில் சாய வந்து வீட்டிற்கு கொண்டு செல்வதாகவும் கூறினார். இதனால் சில சந்தர்ப்பங்களில் தண்ணீர்க் கலன்கள் கனவாடப்படும் துர்ப்பாக்கிய நிலை இருப்பதாகவும் கூறி வேதனைப்பட்டனர். குழாய்த்திருத்த வேலை செய்யும் சந்தர்ப்பங்களில் நகரசபையினரால் தண்ணீர்த் தாங்கிகளில் நீர் விநியோகிக்கப்படுவதாகவும் தனியார் வாகனங்கனில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். தனியாரால் விநியோகிக்கப்படும் நீருக்கு ஒரு குடத்திற்கு  இருபது ரூபா செலுத்தியே பெறவேண்டும் எனவும் வேதனைப்பட்டனர்.
 




துறையூர் கந்தன் கடவைக்கு முன்னால் இருபத்தைந்து கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள வீதியில் இருபத்தைந்து குடும்பங்களுக்க மேல் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் இருக்கும் அப்பகுதியில் குழாய் எதுவும் அமைக்கப்படாத நிலையில் அங்குவாழும் மக்களும் தண்ணீரைப்பெற நீண்டதூரம் செல்ல வேண்டி ஏற்படுகின்றது. இது பற்றி யேசுதாசன் யேசுகமலன் என்பவருடன் கதைத்த போது “2002ஆம் ஆண்டே எழுத்க் கொடுத்தம் எங்கட பக்கத்துக்கு தண்ணிப்பைப்  தாங்க எண்டு. இன்னும் தாறமாறியில்ல . சின்னப்பிள்ளையல தனிய விட்டுட்டு அவவால வரயேலாது அதால வேலைக்கு போட்டு சாப்பிட வந்த நேரத்தில தண்ணி எடுக்க வந்தனான். எடுத்து இதில வச்சிட்டு வேலைக்கு போயிற்று பின்னேரம் வார நேரம்தான் வீட்டுக்கு கொண்டு போகனும்” என்று தன் குடும்பம் நீருக்குப்படுப் கஷ்ரத்தை எம்மோடு பகிர்ந்தார். “குளிக்குறதுக்கு நாங்க பெரியாக்கள் உப்புத் தண்ணிய பாவிப்பம் குழந்தைகளுக்கு எப்படி அதில கழுவுறது? தோல் வருத்தம் தான் வரும். அதால குடிக்க எடுக்கிற தண்ணீலதான் சின்னனுகள குளிக்கவாக்குறது. இந்த நிலைமையில எப்பிடி இந்த இரண்டு பெரல் தண்ணீய இரண்டு நாளைக்கு பாவிக்கிறது” என்று தொடர்ந்தார்.
 ஓவ்வொரு நாளும் ஒரு நேரமாவது இந்த குடிநீர் தமக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும் என விழிகள் குளமாக கூறினர். இருபத்து நான்கு மணிநேரம் நீர் கிடைக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு நாளும் ஒருமணி நேரம் எல்லா மக்களுக்கும் நீர் கிடைத்தால மட்டும் போதும் என்றனர். “வெயிலில் மொட்டாக்கு போட்ட படி தண்ணீருக்குத் தவம் இருக்கிறம் பாருங்கோ” என்றார் அங்கே நின்ற மற்றும் ஒருவர்.
 எத்தனையோ அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்பப்பட்டுவரும் இன்றைய நிலையில் குடிநீருக்காக போராட்டம் நடாத்திவரும் இம் மக்களது குடிநீர் பிரச்சனை என்றுதான் தீருமோ? ஏம் கண்முன்னேயே அவர்கள் தண்ணீருக்காக உச்சி  வெயிலில் உட்காந்திருந்த கொடுமையை காணமுடிந்தது. “தண்ணீ இல்லாம எப்படிப் பிள்ளையல் இருக்கிறது உங்களிட்ட நிறைய சொல்லிட்டம் நிறைவேற்றி வைப்பீங்களா….?” என்று எதிர்பார்ப்புடன் எம்மை நோக்கினர். நிறையுமா….? நிறைவேறுமா…,?

0 comments :: நிறைய சொல்லிட்டம் நிறைவேற்றி வைப்பிங்களா?

Post a Comment