“என்னத்த சொல்றது எல்லாம் போயிட்டுது....

0 comments
“என்னத்த சொல்றது எல்லாம் போயிட்டுது. எங்கட நிலம் முந்தி இப்படியா இருந்துது. எங்களுக்கு வந்த கேடு பிள்ளையல் இது. இந்த மண்ணில அந்தக் காலத்தில நாமள் வாழ்ந்த வாழ்க்கையை நினைச்சுப்பாத்தா நெஞ்சு வெடிச்சுடும்” என்று தன் கவலையை வெளிப்படுத்தினார் துஃ222 கிரமசேவகர் பிரிவு கீரிமலை சேந்தாம் குளத்தில் மீளக்குடிN;யறியுள்ளவர்களின் ஒருவரான குடும்பஸ்த்தர் சௌந்தர் நாயகம். கடற்தொழில் செய்யும் இவருக்கு மூன்று பிள்ளைகள். வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து இளவாலை யொயிட்டியில் வசித்த இவர் தற்போது தன் சொந்த மண்ணில் பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் மீளக் குடியேறியுள்ளார்.
பத்திரிகை ஒன்றின் சேந்தாங்குளம் மீள் குடியேற்றம் பற்றிய செய்தியை படித்தனான் அங்கும் செல்லவேண்டும் என்று தீர்மாணித்தோம். “தெல்லிப்பழையூடாக கீரிமலை”  என்று பெயர் இடப்பட்ட அரச சேவை பேரூந்தில் காலை ஒன்பது மணியளவில் ஆரம்பித்தது நம் பயணம். காங்கேசந்துறை வீதியூடாக கீரிமலை நோக்கிய பயணம் அன்று சற்று வித்தியாசமான பயணமாக அமைந்தது. ஏனனில் வழமையான எம் பயணத்தில் நாம் நான்கு பேர் பங்கபற்றுவோம் ஆனால் அன்றைய பயணத்தில் நாம் இருவர் தான் “என்ன துணிச்சலடா இவளவைக்கு சொல்லுக் கேட்காமல் போகுதுகள் சொன்னாலும் கேக்காலவையாம்” :என்ற ஏனைய நண்பர்களின் மறுப்பினை வாழ்த்தாக ஏற்றுக் கொண்டு சென்றோம். மக்கள் கூட்டத்தை பேரூந்தில் காணவில்லை செல்லும் வழியில் சில இடங்களில் போரின் வடுக்கள் தென்பட்டது. பற்றைகளுக்குள் இருந்து சில வீடுகள் எட்டிப்பர்த்தன. இருமருங்கையும் ஓரளவு அவதானித்தபடி சென்றோம். மாவட்ட புரத்தை அண்மித்ததும் பேரூந்தில் இருந்த அனைவரும் இறக்க ஆயத்தமானார்கள். நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு உட்காந்திருந்தோம். ஆம் நம் இருவரைத்தவிர ஏனையவர்கள் இறங்கி விட்டார்கள். “பிள்ளையள் நீங்க எங்க போகனும்” என்ற ஓட்டுனரின் கேள்விக்கு நாம் பதில் கூற முன் “சேந்தாங் குளமாம்” என்றார் நடத்துனர். ஓட்டுனர் நம் இருவரையும் ஏற இறங்க பார்த்துவிட்டு தனிய வெளிக்கிட்டிருக்கியல்” என்றார். பதில் கூறாமலையே இருந்தோம். நான்கு பேர் மட்டும்தான் பேரூந்தில். இதுவரை பெற்றுக்கொள்ளாத புதிய அனுபவம். ஆளரவமற்ற நீண்ட பாதைவழியே காற்றைக் கிழித்தவாறு சென்று கொண்டிருந்தது பேரூந்து. பேரூந்து தான் செல்லவேண்டிய இடத்திற்கு சுமார் பத்து நாற்பத்தைந்து மணியளவில் சென்று விட்டது. அவ்விடத்திற்கு சென்றதும் எங்கோ தென்னிலங்கையில் நிற்பது போல் உணந்தோம். ஆனால் நாம் நின்ற இடம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய முன்றல். “பிள்ளையல் அந்த வான் சேந்தாங்குளம் பக்கமாத்தான் போகுது. அதில போனா போகலாம்” என நடத்துனர் கூறிய பின்பே சுய நினைவுக்கு வந்தவர்களாக உணர்ந்தோம். மனதில் பெரும் சுமையொன்று ஏறியதாக தோன்றியது. அங்கு காணப்பட்ட வியாபார நிலையங்களும் தங்குமிடமும் வருகை தந்த சுற்றுலா பயணிகளையும் பார்த்தபோது ஏதேதோ எண்ணங்கள் தோன்றியது. எல்லாம் நம் விதி என நினைத்தவாறே சிற்றூர்தியில் ஏறினோம். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இருந்து சற்றுத் தொலைவில் தான் சேந்தாங்குளம் கிராமம் அமைந்திருந்தது. சிற்றூர்தி ஆலயத்தில் இருந்து புறப்பட்டு வளைவில் திரும்பிய போது எதிர்பாராத ஒரு அதிர்ச்சி. “தம்பொல பட்டுன” என்ற பெயர்ப்பலகை தென்பட்டது. அதை உணர்ந்து கொள்ள நீண்ட நேரம் எடுக்கவில்லை. கீரிமலை தீர்த்தத்தின் பெயர் சிங்கள நாமத்தில் பொறிக்கப்பட்டிருந்து. நீண்ட பெருமூச்சோடு பயணித்தோம். சேந்தாங்குளம் சந்தியில் சிற்றூர்தி நம்மை இறக்கியது. எவரையும் வீதியில் காணவில்லை.சுற்றும் மற்றும் பார்த்த போது அரை குறையாக அடைக்கப்பட்ட கிணறொன்றிற்கருகில் ஒருவர் நிற்பதைக்கண்டோம். மகிழ்ச்சியுடன் அவரை நோக்கி சென்றோம். நாம் சென்ற விசயத்தைக் கூற நாம் செல்ல வேண்டிய இடத்தின் குறிப்பைக் அவர் எமக்கு கூறினார். “கொஞ்சத்தூரம் போனா கடையொன்டு வரும் அதுக்கு பக்கத்து லேனால போங்க அங்கதான் நிறைய பேர் குடியேறி இருக்கினம்” என்றார்.நன்றியோடு விடைபெற்ற நாம் கடையில் இருந்தவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். அங்கே தீபச்சந்திரன் என்னும் இளம் குடும்பஸ்தருடன் உரையாட முடிந்தது. “நாங்கள் ஆறு பேர் இந்த கொட்டில்லதான் இருக்கிறம். இருபத்தொரு வருஷத்துக்குப்பிறகு எங்கட இடத்திற்கு வந்திருக்கிறம். சின்னன்ல இந்த மண்ணில ஓடித்திருந்து விளையாடினதுதான் நினைவிருக்கு. அதுக்குப்பிறகு இங்க இருக்கிறதுக்கு பாக்கியம் கிடைக்கல. நாங்க குடியேறி இப்ப மூன்று மாதம்தான் ஆகுது. மலசலகூட வசதிகூட அல்ல அதுதான் பெரிய பிரச்சனையா இருக்கு. அதால பொம்பிலப்பிள்ளையளுக்குதான் பெரிய சிரமம்” என்று தன் சிறிய வயது ஞாபகத்தையும் மீட்டியவாறு கூறினார். அவருடன் கதைத்து விட்டு அக்கடைக்கு முன்னால் இருந்த ஒற்றையடி பாதைவழியே நடந்தோம். வழிமுழுவதும் பற்றைகள்தான் காட்சி தந்தது. சிறிது தூரத்திற்கு குடிசைகள் எவற்றையும் காணவில்லை. தொடந்து நடந்த போது கையில் சிறிய பையுடன் ஒருவர் வந்தார். வழமைபோன்று நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டோம். வந்த அந்த பெண் தன்னை ஜான்ஸ்ராணி என அறிமுகப்படுத்திக் கொண்டார். 2002ஆம் ஆண்டு வன்னியில் இருந்து இளவாளை சீந்திப்பந்தல் பிரதேசத்தில் உறவினர் வீட்டில் வசித்ததாகவும் இங்கு குடியேற அனுமதித்த பின் தம் குடும்பம் தான் முதலில் அங்கு வந்து குடியேறியதாகவும் கூறினார். “பத்தையை பிரித்து குகைக்குள்ள போறமாரித்தான் எங்கட காணிக்குள்ள போனம். கொஞ்சம் கொஞ்சமா பத்தைய வெட்டி காணியை துப்பரவாக்கி கொட்டில போட்டுக்கொண்டு இருக்கிறம்” என்றார். தற்காலிகமான வீடு அமைத்துக் கொடுக்கும் திட்டம் இருந்தும் இதுவரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனைப்பட்டார்.
92 குடும்பங்கள் வரை இங்கு வசிப்பதற்காக பதிவு செய்யப்பட்டிருந்தும் 30 குடும்பங்கள்’ வரையே இப்பகுதியில் தொடர்ந்தும் வசிக்கிறார்கள். இவர்களுக்கான குடிநீர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கிடைக்கக்கூடியதாகவே உள்ளதாகவும் குளிப்பதற்கு நீண்ட தூரத்திலுள்ள பொதுக் கிணறுகளையே பாவிப்பதாகவும் கூறினார்.
ஜான்ஸ்ராணியுடன் கதைத்து விட்டு திரும்பிய போது கையில் பச்சிளம் பாலகனை ஏந்திய படி பெண் ஒருவர் வந்தார். அவரது பெயர் டிலக்ஷினி என்பதை தெரிந்து கொண்டோம் பருத்தித்துறை வியாபாரிமூலையில் முன்னர் வசித்ததாகக் கூறிய அவர் “நாங்க பிறந்தது இந்த மண்ணிலதான் ஆனா ஓடி விளையாட குடுத்து வைக்கல அப்ப போனதுக்கு பிறகு இப்பதான் இந்த மண்ணில கால் வைக்கிறன் தன் ஒன்பது மாத குழந்தையை காட்டியபடி இந்த பிஞ்சோட இங்க இருக்கிறதேண்டா யோசிச்சுபாருங்க ஒழுங்கான வீடு இல்ல எல்லாம் பத்தையும் பறுவுமா கிடக்கு என்ன செய்யிறது. தொழிலுக்காக வந்திட்டம். எங்கட இடம் விட்டுட்டாங்க என்டவுடன நாங்கள் முந்தியிருந்த இடத்தாக்கள் அங்க நாங்க நெடுக இருக்க சம்மதிக்கல அங்க தெமாழிலுக்கும் கஷ்ரம்” என கடற்தொழிலை நம்பி தன்னிடத்தை தேடிவந்த சோகத்தை கூறினார். சேநடதாங்குளம் கடல் அன்னையை நம்பியே அனேக குடும்பம் அங்கு வாழ்ந்து வருகின்றமையை காணமுடிந்தது.
தொடர்ந்தும் நடந்தோம். எதிரே  சற்றுப்பெரிய கொட்டகை ஒன்று தென்பட்டது. அங்கே சென்றோம். நான்கு சிறுவர்கள் பாயில் உட்காந்திருக்க அவர்கள் அருகில் பெண் ஒருவர் உட்காந்திருந்தார். அது ஒரு பாலர் பாடசாலை என்பதை ஊகிக்க முடிந்தது. நம்மை அறிமுகப்படுத்தியவாறு அவருடன் பேசினோம். அவர் தன்னை ஜெனிவா றொபின்சன் என அறிமுகப்படுத்திக் கொண்டார். இக்கிராமத்தில் பாலர் பாடசாலை இல்லாத காரணத்தினால் தானே முன்வந்து அச்சிறுவர்களுக்கு இலவசமாக கற்பித்து வருவதாக கூறினார். இப் பாலர் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு ஒருமாதங்கலே ஆன நிலையில் பதினெட்டுப்பிள்ளைகள் பதிவு செய்திருந்தும் தற்போது ஏழு சிறுவர்களே கல்வி கற்றுவருவதாக கூறினார்.

சேந்தாங்குளம் கடற் தொழிலாளர் சங்கத்தினர் தம் அலுவலகப்பணிகளுக்காக அமைத்த கொட்டகையிலேயே பாலர் பாடசாலையை நடத்தி வருவதாக கூறினார். சுட்டிகளாக தம்மை மறந்து தமக்குள் ஏதோ பேசிச்சிரித்தவாறு இருந்தார்கள் அச்சிறுவர்கள். அச்சிசுவர்களுடனும் உரையாடிவிட்டு அவ்விடத்தில் இருந்து நகர்ந்தோம். கடற்கரையில் வலைகளைப்பிரிப்பவர்கள் ஒருபுறம் பிடித்த மீன்களை தரம் பிரிப்பவர்கள் மறுபுறம் என களைகட்டியிருந்தது. அழகிய அக்காட்சிகளை ரசித்தவாறு திரும்பியபோது. கடற்கரையோரமாக குடிசை ஒன்று தென்பட்டது. மூதாட்டியொருவர் அடுப்பருகில் உட்காந்திருந்தார். மலர்ந்த முகத்துடன் யார் என்றே அறியாத எம்மை “வாங்கோ நாச்சியார்” என்றார். அவருடன் கதைக்கும்போது மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது தன் சொந்தப் பேரப்பிள்ளைகளை உபசரிப்பது போன்று எம்மை உபசரித்தார். அடுப்பிலே இருச்த கறியை வேகமுதல் இறக்கிவைத்தவாறு “என்ர பிள்ளைகளுக்கு ஒருமுடர் தேத்தண்ணி ஆத்தித்தந்தாத்தான் என்ரமனசு ஆறும்” என்றார் உரிமையுடன். இல்லையம்மா நாங்க இப்பதான் தண்ணிகுடிச்சம் என்று கூற எம் அருகில் வந்து உட்கார்ந்தபடி தன் கடந்த காலத்தை எம்மோடு பகிர்ந்தார். “என்ர ஐயாவோட வாழ்ந்த காலத்தில கொஞ்ச நஞ்ச மீனோ பிள்ளையல் பிடிச்சனாங்கள். இந்த முத்தத்தில சல்லியல பரவிற்ரு அதில மீனக்காயப்போட்டா அடுத்த நாள் கருவாடு. ஹீம்…….. இப்ப….” எனப் பெருமூச்செறிந்தார். “முத்தம் நிறைய முப்பத்தேழு தென்னம்பிள்ளையல் நின்டுது. வளவு தேங்காயால நிறைஞ்சிடும். இன்டைக்கு ஒரு தென்னம்பிள்ளை கூட இல்ல. எந்தப்பெரிய வீடு அது இருந்த இடத்தக்கூட கானேலயடி பிள்ளைகள். என்ர எட்டு பெட்டையளையம் இதுக்குள்ளதானே இராசாத்திகள் மாதிரி வளத்தன்” என்று கண்ணீர் சொரிந்தார். “இந்த தேசம் முழுக்க இடம் பேயர்ந்து திரிஞ்சு களைச்சுப்போனம். இனி எங்கேயும் போகேலாது. சாகுற நேரத்திலையாவது என்ர மண்ணில கடக்க முடியுதே அதுவே காணும். அந்த கடல் மாதாட மடில செத்திடனும் என்று வந்திட்டேன்” என்றார்.அமமூதாட்டி.                               
தன் வாழ்வின் இனிமையான பல பாகங்கள் இம் மண்ணில் கழிந்த வரலாற்றையும் தற்போது இருக்கும் நிலையையும் எண்ணி ஏங்கிய அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொள்ள நம் மனது மறுத்தது. ஆனாலும் செல்லவேண்டிய கட்டாயத்துடன் விடைபெற்றம். “திரும்ப எப்ப இந்த கிழடப்பாக்க வருவியள். உங்கள பாத்துக்கொண்டு இருப்பன்” என்ற படி வழியனுப்பி வைத்தார்.
பற்றைகள் நடுவே சிறிய குடிசைகளில் வாழ்ந்தாலும் இருபத்தொரு வருடங்களின் பின் சேந்தாங்குளம் கடல் மாதாவிடம் மீண்டும் சரணடைந்த மகிழ்வை அங்கு மீளக்குடியேறியுள்ள அனைவரினது முகங்களிலும் பேச்சிலும் காணமுடிந்தாலும் தம் மண் முன்னர் இருந்த செழிப்பையும் அக்காலத்தில் தாம் வாழ்ந்த வாழ்வையும் நினைத்து ஏங்கும் ஏக்கம் அதைவிட அதிகமே. அன்றைய காலத்தில் அவர்கள் வாழ்ந்த அவ் வாழ்வை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியாவிட்டாலும் ஓரளவுக்கேனும் இவர்களது வாழ்வு பழைய நிலைக்கு திரும்பாதா??? என்ற ஏக்கத்துடன் நாமும் அவ்விடத்தில் இருந்து திரும்பினோம்.